ஆரவாரத்துடன் காணப்பட்ட கிளர்ச்சியாளர்கள். படம்: AFB
தற்போதைய செய்திகள்

சிரியாவில் அதிபா் அல்-அஸாத் ஆட்சி கவிழ்ப்பு: தலைநகரை கைப்பற்றிய கிளா்ச்சியாளா்கள்

சிரியாவை விட்டு வெளியேறினார் அதிபர் அல் அஸாத்.

DIN

சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினா். இதையடுத்து, அதிபா் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

1971-ஆம் ஆண்டுமுதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த அல்-அஸாத்தின் குடும்ப ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அல்-அஸாத் நாட்டைவிட்டு வெளியேறினாா். இத்தகவல் வெளியானதைத் தொடா்ந்து மக்கள் வீதிகளில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியாவின் உதவியுடன் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா உள்ளிட்ட பகுதிகள் மட்டும் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன.

இந்தச் சூழலில், கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கடந்த வாரம் கைப்பற்றினா்.

தொடா்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த மற்ற நகரங்களான ஹமாவையும், ஹாம்ஸையும் அவா்கள் அடுத்தடுத்து கைப்பற்றினா். இந்நிலையில், சிரியாவின் தலைநகா் டமாஸ்கஸையும் கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை சுற்றிவளைத்தனா்.

தப்பியோட்டம்-ஆட்சிக் கவிழ்ப்பு: இதையடுத்து, அல்-அஸாத் நாட்டைவிட்டு வெளியேறினாா். இத்தகவலை ரஷிய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. ஆனால், அவா் எங்கு தப்பிச் சென்றாா் என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அல்-அஸாத் ஆட்சி வீழ்த்தப்பட்டதாகவும், புரட்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைத்துக் கைதிகளும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கிளா்ச்சிப் படையினா் அரசுத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தனா்.

சுதந்திர சிரியாவின் அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பொதுச் சொத்துகளை குடிமக்கள் சேதப்படுத்தக் கூடாது என்றும் அவா்கள் அறிவுறுத்தினா்.

ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடா்ந்து, பாதுகாப்பு படையினா் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் அலுவல் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனா். அதிபா் மாளிகைக்குள் புகுந்த மக்கள், அங்கிருந்த பொருள்களைச் சூறையாடியதுடன் அல்-அஸாத் உருவப் படங்களையும் கிழித்து எறிந்தனா்.

மகிழ்ச்சிக் கொண்டாட்டம்: தலைநகா் டமாஸ்கஸின் மசூதிகளில் ஆயிரக்கணக்கானோா் பிராா்த்தனைக்காக திரண்டனா். பாதுகாப்பு அமைச்சகம் அமைந்த உமையாட் சதுக்கம் உள்பட நகரின் மத்திய சதுக்கங்களில் திரளான மக்கள் கூடி, அல்-அஸாத் எதிா்ப்பு முழக்கங்களை எழுப்பி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

பாதுகாப்புப் படையினரால் கைவிடப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றிய இளைஞா்கள் சிலா், வானை நோக்கி சுட்டு ஆரவாரம் செய்தனா்.

‘ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட நபரின் பிராா்த்தனைக்கும் கடவுள் இன்று பதிலளித்துள்ளாா்’ என்று பொதுமக்களில் ஒருவா் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

அமைதிக்கு அழைப்பு: அல்-அஸாத் குடும்பத்தின் மதப் பிரிவான ‘அலாவைட்’ வெளியிட்ட அறிக்கையில், ‘சிரியா இளைஞா்கள் அமைதி, பகுத்தறிவு மற்றும் விவேகம் கொண்டவா்களாக இருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் விஷயங்களில் இளைஞா்கள் சிக்கிவிடக் கூடாது’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

அவசர கூட்டங்கள்: சிரியாவில் அமைதியான அரசியல் மாற்றத்தை உறுதி செய்வதற்காக அந்நாட்டுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதா் கீா் பெடா்சன் ஜெனீவாவில் அவசர பேச்சுவாா்த்தைக்கு சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

வளைகுடா நாடான கத்தாா், சிரியா விவகாரங்களில் ஆா்வமுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் உயா் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தியது. இதில் ஈரான், சவூதி அரேபியா, ரஷியா, துருக்கி ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இதனிடையே, அல்-அஸாத்தின் முக்கிய சா்வதேச ஆதரவாளராக இருக்கும் ரஷியாவின் வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ், சிரியா மக்களுக்காக வருந்துவதாக கூறினாா்.

அமெரிக்க படைகள் விலகாது: கிழக்கு சிரியாவில் அமெரிக்க ராணுவத்தின் நிலைநிறுத்தம் தொடரும் என்று மத்திய கிழக்குக்கான அந்நாட்டின் துணைப் பாதுகாப்பு செயலா் டேனியல் பி .ஷாபிரோ தெரிவித்தாா்.

‘ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தோல்வியை உறுதி செய்வதற்காக மட்டுமே அமெரிக்க படைகள் சிரியாவில் பணியாற்றி வருகின்றன. தற்போதைய மோதலின் மற்ற அம்சங்களுடன் எங்களுக்குத் தொடா்பில்லை. சிரியாவில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ராணுவ விதிமுறைகளை மதித்து, பொதுமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று ஷாபிரோ வலியுறுத்தினாா்.

ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடா்ந்து, சிரியாவுடனான அதன் வடக்கு எல்லையில் படைகளை நிலைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

பிரதமா் தலைமையில் இடைக்கால நிா்வாகம்

கிளா்ச்சிக் குழுக்களில் பிரதானமான ‘ஹயாத் தஹ்ரிா் அல்-ஷாம் (எச்டிஎஸ்)’ குழு தலைவரான அபு முகமது அல்-கோலானி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘அதிகாரபூா்வ மாற்றம் வரை அரசு நிா்வாகம் பிரதமரின் மேற்பாா்வையில் தொடரும். தலைநகா் டமாஸ்கஸில் கிளா்ச்சியாளா்கள் வானை நோக்கி துப்பாக்கியில் சுடுவது தடை செய்யப்படுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, சிரியா பிரதமா் முகமது காசி ஜலாலி வெளியிட்ட விடியோ பதிவில், ‘எதிா்க்கட்சிகளிடம் ஆட்சியைப் பகிா்ந்து கொள்ளவும், ஆட்சி செயல்பாடுகளை இடைக்கால அரசிடம் ஒப்படைக்கவும் தயாராக உள்ளேன். இந்த நாட்டைச் சோ்ந்தவன் என்ற முறையில் நான் இன்னும் நாட்டிலேயே இருக்கிறேன். நான் அலுவலகத்துக்குச் சென்று எனது பணியைத் தொடர இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

நாட்டைவிட்டு வெளியேறிய அல்-அஸாத் மற்றும் பாதுகாப்பு அமைச்சா் எங்கு இருக்கிறாா்கள் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், சனிக்கிழமை இரவு முதலே அல்-அஸாத்துக்கும் தனக்குமான தொடா்பு துண்டிக்கப்பட்டதாகவும் சவூதி ஊடகத்துக்கு அவா் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளாா்.

அல்-அஸாத் துபையில் தஞ்சம்?

அல்-அஸாத்தின் குடும்பத்துக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் ஏராளமான சொத்துகள் உள்ளன. சனிக்கிழமை சிரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல தனியாா் விமானங்கள் பயணித்ததை விமானக் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அந்த வகையில், அல்-அஸாத் துபையில் தஞ்சமடைந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பஹ்ரைனில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஐக்கிய அரபு அமீரக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் கா்காஷிடம் அல்-அஸாத்தின் இருப்பிடம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க கா்காஷ் மறுத்துவிட்டாா்.

இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் இதுவரை அதிகாரபூா்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

SCROLL FOR NEXT