கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடித்து படுகாயமடைந்த 9 ஐயப்ப பக்தர்களில் 2 பேர் பலியாகினர்.
ஹூப்பள்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலின் அறையில் கடந்த திங்களன்று (டிச.23) உறங்கிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களில் 9 பேருக்கு, அங்குள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 9 பேரும் கர்நாடக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த ஐயப்ப பக்தர்களான நிஜலிங்கப்பா மல்லப்பா பெப்பூர் (வயது-58) மற்றும் சஞ்சய் பிரகாஷ் சவ்டட்டி (17) ஆகிய இருவரும் நேற்று (டிச.25) காலை சிகிச்சைப் பலனின்றி பலியானார்கள்.
மேலும், படுகாயமடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஐயப்ப பக்தர்களை கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களுக்கு சிறந்த மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வருவதாகவும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து அவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஐயப்ப பக்தர்களான அவர்கள் அனைவரும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு கோயிலில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.