முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுகவினர் கைது: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

அதிமுகவினரின் கைதுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 11:09 AM
பகிர்:

அதிமுகவினரின் கைதுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக இன்று(டிச. 30) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் கைதான ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என திமுக அமைச்சர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை கைது செய்யவேண்டும் என்றும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதில் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அதிமுகவினரின் கைதுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில், அவர்களை கைது செய்து ஜனநாயகத்தை அடக்கும் திமுக அரசின் இந்த செயல் நிச்சயமாகக் கண்டிக்கக்கூடிய விஷயம்.

மாணவிக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக கடமை, இதைத் தமிழக அரசு தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்களைக் கைது செய்வதன் மூலம் அடக்கிவிடலாம் என்று இந்த அரசு மனக்கோட்டை கட்டக் கூடாது. இது தவறான முன் உதாரணம்,

இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. எனவே கைது செய்தவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.