மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் அதிமுகவிற்கு உண்மையாக இருந்ததே கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, காவல் துறை மீது ரௌடிகளுக்கு அச்சம் இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மேலும் நான் துரோகி இல்லை. அண்ணாமலைதான் ஒட்டுமொத்த துரோகி. அண்ணாமலை போல் நான் நியமன தலைவர் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி போல பேசக்கூடியவர் அண்ணாமலை.
மோடியிடம் அருகில் அமர்ந்ததற்கே அண்ணாமலைக்கு கோபம் வருகிறது.
எங்கள் தலைவர்களை பற்றி தவறாக பேசினால் நாங்கள் சும்மா இருப்போமா என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.
ஓபிஎஸ் உண்மையாக இருந்ததே கிடையாது
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் அதிமுகவிற்கு உண்மையாக இருந்ததே கிடையாது. அதிமுகவைப் பற்றி கவலைப்படாத தலைவர் என்றால் அது ஓபிஎஸ் தான்.
அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என ஓபிஎஸ் உடன் பல கட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டது என கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது 5 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை அதிமுக புறக்கணித்துள்ளது.
அதேபோன்று தான் தற்போது விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் புறக்கணித்துள்ளோம்.
வாக்காளர்களை கொடுமைப்படுத்தி தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
தேர்தல் சுதந்திரமாக நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக யாரையும் கட்டாயப்படுத்தி வாக்களிக்க வேண்டும் என கூறக்கூடாது.
மேலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.
ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளஐ எடுத்து மது குடிப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.