சிவகங்கை: சிவகங்கையில் உள்ள நவீன மர இழைப்பு பட்டறையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நேரிட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களும் தேக்குமரங்களும் எரிந்து சேதமடைந்தன.
சிவகங்கை குண்டூரணி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நவீன மர பட்டறையை நடத்தி வருபவர் சதீஷ்குமார். இந்த பட்டறையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மரவேலைப்பாடுகளை நேர்த்தியாக வடிவமைப்பதில் பிரபலமான உள்ள இந்தப் பட்டறையில் மர வேலைகள் செய்வதற்கென்று புதுவகையான நவீன இயந்திரங்களும் இருந்தன.
இந்நிலையில், இன்று(ஜூலை 14) அதிகாலை திடீரென்று இந்தப்பட்டறையில் தீப்பிடித்து வேகமாகப் பரவியதால் பட்டறையில் இருந்த அனைத்து தேக்கு மரங்களும், இயந்திரங்களும் மேற்கூரை உள்பட அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் பட்டறை எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு தொழில்போட்டி காரணமாக செய்யப்பட்ட சதிசெயலா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்த மர பட்டறையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.