தூத்துக்குடி: தூத்துக்குடி உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 ஆவது ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும்.
திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவா்-மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவா்கள், பனைத் தொழிலாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும். 10 ஆம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தோ் பவனி நடைபெறும்.
இந்த நிலையில், தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 ஆவது ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு கொடியேற்றறத்திற்கான சிறப்பு திருப்பலி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றி வைத்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டனர். மேலும், புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெ. கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும். இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய நாள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருவிழாவின் பாதுகாப்புக்காக மாநகர் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 15 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 900 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
திருவிழாவின்போது, திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க சாதாரண உடைகளில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபடுவா். மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.