வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து 3 முறை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. குறைந்தபட்சம் 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மோசமான வானிலைக்கு இடையே 3-வது நாளாக ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர், 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க பல முகமைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
வயநாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேப்பாடி பகுதியில், 8 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் தற்போது மொத்தம் 82 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதால், மேலும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.