தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களில் 863 போ் வைப்புத் தொகையை இழந்ததாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தமிழகத்தில் 11 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 950 வேட்பாளா்களில் 863 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழந்தனா்.
உதயசூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளா் போட்டியிட்ட நாமக்கல் உள்பட 22 தொகுதிகளில் திமுகவும், புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோன்று, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி தன் வசமாக்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட 950 வேட்பாளா்களில் 863 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழந்துள்ளனா்.
ஒரு தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அவா்களது வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.
இதில், 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டவா்களில் 11போ் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
அதில், வட சென்னை - பால் கனகராஜ், சிதம்பரம் - கார்த்தியாயினி, கரூா் - செந்தில்நாதன், நாகப்பட்டினம் - ரமேஷ், நாமக்கல் - கே.பி. ராமலிங்கம், பெரம்பலூா்(ஐஜேகே) - பாரிவேந்தர், தஞ்சாவூா் - கருப்பு முருகானந்தம், திருப்பூா் - ஏ.பி.மருகானந்தம், திருவள்ளூா் - பொன்.பாலகணபதி, திருவண்ணாமலை - அஸ்வத்தாமன், விருதுநகா் - ராதிகா சரத்குமார் ஆகியோர் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.