கள்ளச்சாராய மரணம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அதிமுக கடிதம்
கள்ளச்சாராயம் அருந்திவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் பகுதி மற்றும் கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் 109 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் 35 பேர் உயிரிழ்ந்துள்ளனர். இதில் 5 பேர் பெண்கள். இறந்தவர்களில் உடல்கூராய்வு முடிந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை(ஜூன் 21) விவாதிக்க அதிமுகவினர் நேரம் கேட்டு பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அதிமுக பேரவை உறுப்பினர்கள் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.