பாலியல் விடியோ எடுத்து அரசு அதிகாரிக்கு மிரட்டல்: பெண், மூ.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது
பாலியல் விடியோவை வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது
மயிலாடுதுறை: அரசு அதிகாரியிடம் சேர்ந்து எடுத்த பாலியல் விடியோவை வெளியிட்டு விடுவதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை மயிலாடுதுறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் (59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியில் உள்ளார். காரைக்கால் மாவட்டம் காமராஜர் சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்து தங்கியுள்ள இவருக்கு, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி(40) என்பவருடன் புரோக்கர் மூலமாக தொடர்பு ஏற்பட்டு, சில மாதங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போதும் சுபாஷினி தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி வெங்கடேசனிடம் இருந்து சிறுகசிறுக பணம் பெற்றுள்ளார். ஏப்.27-ஆம் தேதி இருவரும் தனிமையில் இருந்ததை வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர், ஏப்.29-ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில்; மாநில இளைஞரணி துணை செயலாளராக உள்ள மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் என்கிற பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்து விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு தனது கூட்டாளிகளான முகமது நசீர், தினேஷ் பாபு ஆகியோருடன் சென்ற பிரகாஷ், சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தை பறித்துள்ளனர்.
மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த விடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா மற்றும் போலீஸார் விரைந்து செயல்பட்டு, சுபாஷினி (40), கில்லி பிரகாஷ (39), முகமது நசீர்(39), தினேஷ் பாபு(31) ஆகிய 4 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையிலும், சுபாஷினியை திருவாரூர் சிறையிலும் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011-ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.