சென்னை: தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் இந்தியில் பேசி பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக கொடுத்திருந்த காவல் கட்டுப்பாட்டு எண்களை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது என்ஐஏ அதிகாரிகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மர்ம நபர் மிரட்டல் விடுத்து அழைப்பு எந்த பகுதியில் இருந்து வந்துள்ளது, எந்த சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அந்த நபர் ஏற்கனவே இதுபோன்று மிரட்டல் விடுத்த நபரா? அல்லது புதிதாக மிரட்டல் விடுக்கும் நபரா?, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஹிந்தியில் பேசியதால் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ற கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற மிரட்டல்கள் பொதுவாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் வந்து சேரும். அதுகுறித்த முழுமையான விசாரணைக்கு பிறகு அந்த மிரடல்கள் புரளி என தெரியவரும்.
அதன் பிறகு மிரட்டல் விடுத்த நபர் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால், முதல் முறையாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட நபர் தைரியமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.