தற்போதைய செய்திகள்

மாநிலத்திலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம், மயிலாப்பூரில்!

தமிழ்நாட்டிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகின்றனர்.

DIN

சென்னையில் ஒரே குடும்ப அட்டையில் 20 நபர்களின் பெயர்கள் இருப்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தக் குடும்பமே பெரிய குடும்பமாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த நபரான 89 வயது முன்னாள் அரசு ஊழியர் ஏ.ஆர்.வெங்கடேசன் பேசுகையில், வீட்டில் மொத்தம் 30 நபர்கள் இருப்பதாகவும், அனைவரும் மயிலாப்பூரின் அப்பர்சுவாமி கோவில் தெருவின் இரண்டு மாடி கட்டட வீட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

ஓய்வுபெற்ற துணை செயற்பொறியாளரான அவர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் ஒரே குடும்ப அட்டையில் சேர்க்க பல சிக்கல்களைக் கடந்து வந்ததாகக் கூறுகிறார்.

20 வருடங்களுக்கு முன்னர் அட்டை வழங்கப்பட்டபோது 24 பெயர்கள் இருந்ததாகவும், தற்போது புதிய அட்டையில் 20 பெயர்கள் இருப்பதாகவும் , அதில் 8 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கென குடும்ப அட்டை வடிவமைப்பில் சிறிய மாற்றத்தை அதிகாரிகள் செய்துள்ளதாகவும் கூறினார்.

வெங்கடேசன் பேசுகையில், “இந்த வீடு என் அப்பாவால் 1942-ம் ஆண்டு கட்டப்பட்டது. எனக்கு ஐந்து மகன்கள். அனைவரும் ஒரே வீட்டில் தனித்தனி குடியிருப்புகளில் வசிக்கிறோம். நான் 2000-த்தின் தொடக்க ஆண்டுகளில் சக்கரை அட்டை வைத்திருந்தேன். நாங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தோம்” என்றார்.

மொத்த குடும்ப உறுப்பினர்களும் ஆறு குடியிருப்புகளைக் கொண்ட ஒரே பெரிய வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தக் குடும்பத்தை கூட்டுக் குடும்பம் என்று அழைக்காமல் ‘பெரிய குடும்பம்’ என்று அழைக்கச் சொல்கிறார் வெங்கடேசன்.

”மொத்தமாக குடும்பத்தில் 30 நபர்கள் இருந்தாலும், அதில் 10 நபர்களின் பெயர்களை நாங்கள் சேர்க்கவில்லை” என்று வெங்கடேசனின் மகன் கோதண்டம் தெரிவித்தார்.

மேலும், முதன்முதலாக புதிய குடும்ப அட்டைக்கு பதிவு செய்தது குறித்து பகிர்ந்துகொண்ட கோதண்டம், “2006 - 2007 ஆண்டுகளில் தனியாக புதிய குடும்ப அட்டைக்கு பதிவு செய்ய விண்ணப்பித்தோம். ஆனால், நாங்கள் வேறு முகவரிக்கு மாறினால் தான் தனி அட்டை வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால், மாறுவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை” என்றார்.

பெரிய குடும்பமாக இருப்பதால், கடந்த ஆண்டு இவர்களது குடும்பம் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.

மே 22 நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப அட்டைகளில் 7.01 கோடி பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு குடும்ப அட்டைக்கு சராசரியாக 3.1 நபர்கள் என்ற அளவு வருகிறது.

அதிகாரப்பூர்வத் தரவுகளின் படி, தமிழ்நாட்டில் 1,312 குடும்ப அட்டைகளில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 277 அட்டைகள் தென் சென்னையிலும், 255 அட்டைகள் வட சென்னையிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் பெரிய குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “குடும்ப அட்டைகளை ஆதாருடன் இணைத்து டிஜிட்டல் முறையில் மாற்றியது, மாநிலத்தின் குடும்பங்களின் அமைப்பைக் கண்டறிய உதவியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 2, 3 நபர்கள் உள்ளனர்.

பல காரணங்களுக்காக, தங்களது மகன், மகள் தனியே சென்ற பிறகும் கூட அவர்களது பெயர்களை நீக்காமல் பலரும் வைத்துள்ளனர். பல குடும்ப அட்டைகள் ஆண்டுகணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதேபோன்று, பல குடும்ப அட்டைகள் சக்கரை, பருப்பு வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2.24 கோடி குடும்ப அட்டைகளில், சராசரியாக 1.7 கோடி அட்டைதாரர்கள் மட்டுமே மாதத்திற்கு ஒரு பொருளாவது ரேஷன் கடைகளில் தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT