புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் கடை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மழையூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் முருகேசன்(25). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், மழையூா் கடை வீதியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்றபோது, இவரது வாகனத்தை வழிமறித்த மா்ம நபா்கள் முருகேசனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில், பலத்த காயமடைந்த முருகேசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த மழையூா் போலீசார், முருகேசனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முருகேசனை கொலை செய்தது யாா், எதற்காக கொலை செய்யப்பட்டாா் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கொலை செய்தவா்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முருகேசனின் உறவினா்கள் மழையூா் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மதுக்கடை மீது தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- கறம்பக்குடி இடையே 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், முருகேசன் கொலை வழக்கில் மழையூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மற்றும் அவரது நண்பரை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
காதல் விவகாரத்தில் முருகேஷை கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.