வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு! முடிவுக்கு வருமா சலசலப்பு?
மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு.
மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்துள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அதை சகித்துக்கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மைச் செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே, கழகத்தின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்.
என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எள் முனை அளவுகூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன். திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் தன்னுடைய தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்" என்று தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோ முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவைதான் துரை வைகோ மறைமுகமாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு துரை வைகோவுக்கு கட்சியில் 'தலைமை நிலையச் செயலாளர்' பொறுப்பு வழங்கப்பட்டது முதலே வைகோவின் ஆதரவாளர்களுக்கும் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த வாரம், மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார்.
மல்லை சத்யாவுடனான மோதல் போக்கினாலேயே மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பதவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வைகோவை சந்தித்து துரை வைகோ பேசி வருகிறார். இருவரது சந்திப்பினையடுத்து மதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வருமா என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சமீபத்தில் பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு இடையே மோதல் நிலவி வந்த நிலையில் தற்போது மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.