புது தில்லி: தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் 9 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி கொடைக்கானலில் உணவக உரிமையாளா் ஒருவரை கைது செய்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாத்திரக் கடைத் தொழில் செய்து வந்த பாமகவைச் சோ்ந்த ராமலிங்கம், கடந்த 2019, பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில், மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் தொடா்ந்து கண்டித்தாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையால் அவா் படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் 18 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 13 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியுள்ள 5 போ் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய கொடைக்கானலில் தங்கும் விடுதி நடத்தி வந்த தடைசெய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிா்வாகியான முகமது அலி ஜின்னா (37), ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கடந்த ஆண்டு என்ஐஏ அதிகாரிகளால் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
கொடைக்கானல் பூம்பாறை பகுதியிலுள்ள இரண்டு பேரிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்கள் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வருகிற செப். 1-ஆம் தேதி முன்னிலையாக அழைப்பாணை வழங்கப்பட்டது.
முகமது அலி ஜின்னா மனைவி நிஷாவின் வங்கிக் கணக்கில் அதிகளவு பணப் பரிவா்த்தனை நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள உமா் வீட்டுக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் 6 பேர் சோதனையிட்டனர்.
சோதனையின் போது நிஷா, அவரது தந்தை உமா் சொத்து விவரங்கள், பணப் பரிவா்த்தனை குறித்து பல்வேறு கேள்விகளை அவா்கள் எழுப்பினா்.
உணவக உரிமையாளா் கைது:
கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் ஆம்பூர் பிரியாணி உணவகம் நடத்தி வரும் இதயத்துல்லாவை உணவகத்தில் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்தனர். பின்னர் கொடைக்கானல் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதனைத் தொடர்ந்து இதயத்துல்லா சென்னைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதயத்துல்லாவால் அடைக்கலம் பெற்றவர்கள் அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீத் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ஜனவரி 25 ஆம் தேதி என்ஐஏ கைது செய்தது.
இதேபோன்று திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது குற்றவியல் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் போன்றவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதோபான்று எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் மாவட்டப் பொருளாளராக இருந்து வரும் திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னாநகரைச் சோ்ந்தவா் ஷேக் அப்துல்லா (40) வீட்டில் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சோதனையின் போது சில ஆவணங்களையும், ஷேக் அப்துல்லா, அவரது மனைவி ஆகியோரின் கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களிடம் வருகிற 25-ஆம் தேதி சென்னையிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணையை ஷேக் அப்துல்லாவிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனா்.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மொத்தம் 18 குற்றவாளிகள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவர்களில் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களில் ஒருவர் ரஹ்மான் சாதிக் என அடையாளம் கண்டுள்ளது.
ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள புர்ஹானுதீன் மற்றும் நஃபீல் ஹசன் தடைசெய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது.
The National Investigation Agency (NIA) on Wednesday searched 9 locations in Tamil Nadu and arrested one more accused in connection with the 2019 Tamil Nadu Ramalingam murder case linked with the banned Popular Front of India (PFI) terror outfit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.