திருநெல்வேலியில் நடைபெறும் 5 மாவட்டங்களுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை(ஆக.22) தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அவர் வருகையையொட்டி, நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவை தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். களத்தில் சென்று மக்களை சந்திப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வடமாநிலங்களில் கொடிகட்டி பறக்கும் பாஜக, இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தமிழத்தில் கட்சியை காலூன்ற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாஜகவின் தமிழகத் தலைவரான நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்களை உள்ளடக்கிய மண்டல வாரியான மாநாடுகளை அறிவித்தார்.
அதன்படி, பாஜக சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய 5 மாவட்டங்களுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை(ஆக. 22) தச்சநல்லூரில் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்ற உள்ளனா்.
அமித் ஷா வருகை
இந்நிலையில், கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித் ஷா, பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் 3.10 மணிக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தடையும் அமித் ஷா, அங்கிருந்து நேரடியாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு தேநீீர் விருந்தில் கலந்து கொள்கிறார். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.
தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும் மாநாட்டில் அமித்ஷா பேசுகிறார். இந்த மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நகர்வுகள், தேர்தலுக்கு தயாராவது, கூட்டணிகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா வருகையையொட்டி, மேடை, நிா்வாகிகள் அமரும் இடம், தொண்டா்கள் அமரும் இடம் உள்ளிட்டவற்றில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி நெல்லை நகரப் பகுதிக்குள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,
நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. நெல்லை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.