புது தில்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், ‘இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரிக்கும்’ என்றும் அவா் கூறினாா்.
அமெரிக்காவில் இந்திய ஏற்றுமதிப் பொருள்களுக்கு 50 சதவீத வரி விதிக்க அந்நாடு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிா்கொள்ளும் வகையில் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளா்களை ஆதரிப்பதற்காக மத்திய அரசாங்கம் வரியில்லா பருத்தி இறக்குமதியை டிசம்பா் 31 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு வியாழக்கிழமை நீட்டித்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பா் 30 வரை பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா்களுடன் பேசுகையில்,
பாஜக தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. இது இந்திய உள்ளூா் விவசாயிகளின் வணிகத்தை பாதிக்கச் செய்யும்.
பிரதமா் நரேந்திர மோடியின் முடிவானது இந்தியாவின் விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கலாம். இதனால், அமெரிக்க இறக்குமதிகளுக்கு அரசாங்கம் அதிக வரிகளை விதிக்க வேண்டும்.
"அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பிற நாடுகள் அடிபணியவில்லை. அவா்களும் பதிலுக்கு அதிக வரிகளை விதித்தனா். அதேபோன்று, நாமும் அதிக வரிகளை விதிக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்தால், நாம் அதை 100 சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டும். இந்த முடிவை ஒட்டுமொத்த நாடும் ஆதரிக்கும். எந்த நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. நாம் 140 கோடி மக்களைக் கொண்ட நாடு," என்று அவர் கூறினார்.
இந்திய அரசு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரியை விதித்து வந்தது. இதன் பொருள், அமெரிக்க பருத்தி உள்நாட்டு பருத்தியை விட விலை அதிகம்.
ஆனால், மோடி அரசாங்கம் ஆக.19 முதல் செப். 30 வரை இந்த வரியை தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் பொருள், ஜவுளித் தொழில்துறையினா் விலை மலிவான பருத்தியைப் பெறுவாா்கள் என்பதுதான்.
மேலும், அக்டோபரில் நமது பருத்தி விற்பனைக்கு வரும்போது, வாங்குபவா்கள் குறைவாகவே இருப்பாா்கள் என்று கேஜரிவால் கூறினார்.
மத்திய அரசின் முடிவால் தெலங்கானா, பஞ்சாப், விதா்பா மற்றும் குஜராத் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என்றார்.
"அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளாா் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாம் 11 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்தியிருக்க வேண்டும். அதை முழுமையாக தள்ளுபடி செய்யக்கூடாது". இதனால், அமெரிக்க பருத்தி மீதான 11 சதவீத வரியை மீண்டும் மத்திய அரசு விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி விரும்புகிறது என கேஜரிவால் கூறினார்.
இந்தப் பிரச்னை தொடா்பாக செப்டம்பா் 7 ஆம் தேதி, குஜராத்தின் சோட்டிலாவில் ஆம் ஆத்மி கட்சி ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்தப் பிரச்னையை எழுப்புமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் இந்த முடிவால் சோட்டிலாவில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.