விராலிமலை அருகே உள்ள வேலூர் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அய்யனார் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அந்த பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு குலதெய்வமாகவும் சுற்று வட்டாரங்களுக்கு காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா நிகழாண்டு நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான மண் குதிரைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினர்.
கீழ தொட்டியபட்டியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களால் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட சுடுமண் குதிரைகளை வான வேடிக்கை முழங்க பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் 2 கிலோ மீட்டர் தோளில் சுமந்து வந்து வேலூர் அய்யனார் கோயிலில் வைத்து பூஜை செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு வேலூர் பகுதி முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஊரே ஜொலித்தது. விழாவையொட்டி இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.