திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை வெள்ளிக்கிழமை(டிச.5) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது, எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான அமைப்பு மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழலை கருத்தில்கொண்டு மண்அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க ஏரியின் கரைகள் இயற்கை முறையில் வெட்டிவேர் பயன்படுத்தி நவீன முறையில் வலுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் அக்குபிரஷர் தன்மையுடைய நடைபாதை 2.00 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைவரும் அணுகக்கூடிய வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏரிக்கரையைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் பல வகையான நாட்டு மரக்கன்றுகள் மற்றும் மலர் செடிகள் நடப்பட்டுள்ளதுடன், ஏரிக்கரையை சுற்றி நவீனமுறையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபாதை முழுவதும் மெல்லிய இசையுடன் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கிகளும், ஓய்வெடுக்க அங்காங்கே நவீன நிழற்குடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நடைபாதையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளதுடன், பூங்காவிற்கு வரும் மக்களின் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப.செல்வராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டப்பேரவை மன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், துணை மேயர் சு.ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராம்பிரதீபன், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் பொறி.ஆர்.சந்திரசேகர், தலைமை பொறியாளர் (திட்டங்கள்) பொறி. ஆர்.கிருஷ்ணசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.