ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை
ராஜபாளையம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தொடர்பாக...
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவரது நண்பரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் அரண்மனை தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் வேல்முருகன்(37). இவர் லோடு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி காளீஸ்வரி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அதே பகுதியில் இவரும், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் பாலமுருகன்(24) ஆகிய இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது.
Advertisement
இதில், ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அருகில் இருந்த கல்லை எடுத்து வேல்முருகன் தலையில் போட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார், கொலை செய்யப்பட்ட வேல்முருகன் சடலத்தை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து கொலையாளி பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.