சிவகங்கை: சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் 101-ஆவது அமைப்பு நாள் விழாவை அந்த கட்சியினர் இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கான்பூரில் (உத்தரப்பிரதேசம்) நடைபெற்ற மாநாட்டில் நிறுவப்பட்டது. இந்த மாநாட்டிற்கு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமை ஏற்க அழைக்கப்பட்டிருந்தார்கள். அவரது தலைமை உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது முதல் நாட்டின் பரிபூரண விடுதலைக்காக போராடியது. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிகளற்ற, வர்க்கங்களற்ற, சுரண்ட சுரண்டலற்ற சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்காகவும், உலக சமாதானத்திற்காகவும் போராடி வருகிறது.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்காகவும், பல்வேறு மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளை பாதுகாக்க, வங்கிகளை நாட்டுடைமையாக்கிட, மன்னர் மானியத்தை ஒழித்திட, நிலப்பிரபுத்துவ - சாதிய கொடுமைளை ஒழித்திட வீரம் நிறைந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மக்கள் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காகவும், இறையாண்மையை பாதுகாப்பதற்காகவும், உறுதியோடு போராடி வருகிறது.
இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சட்டம், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு போன்றவற்றை பாதுகாப்பதற்காக போராடி வருகிறது.
அளப்பரிய தியாகங்களை செய்துள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு 101 ஆவது பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சிவகங்கையில் உள்ள மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான தியாகி ராமநாதன் இல்லத்தில் நடைபெற்ற விவசாய சங்க மாநில தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். குணசேகரன் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மருது. நகர செயலாளர் எம். ஆர். சகாயம், ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், சூரக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, நகர துணை செயலாளர் பாண்டி, மாதர் சங்க அமைப்பாளர் குஞ்சனம் காசிநாதன், அலுவலக செயலாளர் முருகன், மூத்த உறுப்பினர்கள் சாத்தப்பன், ஜெயக்குமார் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட கலந்து கொண்டனர். மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த உள் அரங்க கூட்டத்தில் கட்சியின் வரலாறு, தியாகம், எதிர்கால கடமை, இன்றைய அரசியல் குறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். குணசேகரன் உரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.