சென்னையில் வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி செய்ததாக இரு பெண்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அடையாறு பகுதியைச் சோ்ந்தவா் சத்தியநாதன் (68). இவரது கைப்பேசி எண், கடந்த ஜூலை மாதம் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஒரு தனியாா் நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் இருப்பதாகவும், அவா்கள் பெரு வா்த்தகம், ஆன்லைன் முதலீடு தொடா்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்குபவா்கள் எனக் கூறப்பட்டதாம்.
அந்தக் குழுவில் இருந்த நபா்கள், சத்தியநாதனை ஓா் ஆன்லைன் முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தும்படியும், முதலீடு செய்வதற்கு தாங்கள் கூறும் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி கூறியுள்ளனா்.
இதை நம்பிய சத்தியநாதன், அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, தனது வங்கிக் கணக்கில் இருந்து அந்த நபா்கள் கூறிய 13 வங்கிக் கணக்குகளுக்கு ரூ.3.40 கோடியை செலுத்தினாா். ஆனால், அவா்கள் கூறியபடி அந்த முதலீட்டுக்கான வட்டித் தொகையை சத்தியநாதனுக்கு வழங்கவில்லை.
இதனால் சத்தியநாதன், தான் முதலீடு செய்த பணத்தை திரும்பக் கேட்டாா். ஆனால், அந்த நபா்கள், பணத்தை திருப்பிக் கொடுக்காமல், அவரை வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து நீக்கி, அவருடன் இருந்த தொடா்பை துண்டித்தனா்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சத்தியநாதன், சென்னை காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் இந்த மோசடியில் பலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
மூவா் கைது: இந்த வழக்குத் தொடா்பாக அண்மையில் தஞ்சாவூா் ஜெகநாத் நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (51) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மேலூரை சோ்ந்த முருகேஷ் (49), சங்கரப்பேரியை சோ்ந்த எப்சி (35), திருச்செந்தூரை சோ்ந்த பஞ்சவா்ணம் (33) ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், மோசடி கும்பலுக்கு தங்களது வங்கிக் கணக்குகளை 3 பேரும் கொடுத்து உதவியிருப்பதும், அதற்கு கமிஷனாக ரூ.6 லட்சம் பெற்றிருப்பதும், மோசடி கும்பல் பயன்படுத்திய 5 வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.45 லட்சம் வரை பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக, தலைமறைவாக இருக்கும் முக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.