இங்கிலாந்து குடிமகனான பின்னரும் அங்கிருந்தவாறு உத்தரப்பிரதேசத்தில் அரசு உதவி பெறும் மதரசா ஒன்றில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருவதாக ஊதியம் பெற்று வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னௌ: உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கரை சேர்ந்தவர் மௌலானா சம்சுல் ஹூடா கான். 1984-இல் அரசு உதவி பெறும் மதரசா ஒன்றில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தும், சர்வீஸ் ஆவணங்களை புதுப்பித்து வந்தவர், 2017-இல் முழுப் பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
ஆனால், ஹுடா 2007-இல் இங்கிலாந்தில் குடியேறி 2013-இல் அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். இருப்பினும், அவர் இந்தியக் குடிமகனாக இல்லாதபோதும், வெளிநாட்டில் வசித்தபடியே ஆசிரியர் பணியில் இல்லாதபோதும், 2013 முதல் 2017 வரை ஓய்வூதியப் பலன்கள் தவிர, தொடர்ந்து சம்பளம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவருக்கு உதவிய சிறுபான்மையினர் நலத்துறையின் 4 மூத்த அதிகாரிகளை உத்தரப்பிரதேச அரசு கடந்த நவம்பர் 22 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் மத அமைப்புகளுடன் ஹுடா கானுக்கு தொடர்பு இருப்பதும், 20 ஆண்டுகளாக, அவர் பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும், இந்தியாவில் உள்ள 7-8 வங்கிக் கணக்குகள் மூலம் பல கோடி நிதியைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் ரூ.30 கோடிக்கு அதிகமான சொத்துகள் வாங்கி குவித்திருப்பது மற்றும் சந்தேகத்திற்குரிய நிறுவனங்களிடம் இருந்து அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.5 கோடி வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் ராஜா ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மதரசாக்களுக்கு நிதி அனுப்பியதாகவும், அந்த நிறுவனம் ஒரு தீவிரவாத சித்தாந்தத்தை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் ஆசம்கர் மற்றும் சந்த் கபீர் நகரில் இரண்டு மதரசாக்களை நிறுவியிருந்ததகாவும், அவற்றின் பதிவுகள் பின்னர் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
"மௌலானா சம்சுல் ஹூடா கான் தீவிரவாத சித்தாந்தத்தை ஊக்குவித்ததாகவும், மதக் கல்வி என்ற போர்வையில் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்றும் அவர் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான தவாத்-இ-இஸ்லாமியில் இருந்து வருவதாக நம்பப்படுகிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.