புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி சட்டத்திருத்தத்தால் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் உயரவுள்ளது. இதன் விளைவாக, தற்போது ரூ.18-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை உயர வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில், மத்திய புதிய கலால் (திருத்த) மசோதா 2025 இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் சிகரெட் விலைகள் கடுமையாக உயர உள்ளன.
இந்தத் திருத்தத்தின் கீழ், சிகரெட்டுகளுக்கான நீளம் மற்றும் அதன் வகை மற்றும் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போது 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.200 முதல் ரூ.735 வரை வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தத் தொகை ரூ.2,700 முதல் ரூ.11,000 வரை பல மடங்கு உயா்த்தப்பட உள்ளது.
மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக நான்கு மடங்காக உயா்த்தப்படும். ஹுக்கா புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயா்த்தப்படும். அதிகபட்சமாக, புகையிலைச் சோ்மானங்களுக்கான வரி 60 சதவீதத்திலிருந்து 300 சதவீதமாக ஐந்து மடங்கு உயா்த்தப்படும். இன்று ரூ. 18-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 72 வரை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலை உயா்வு குறித்த செய்தி வெளியானதும், சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் எழுந்தது. "சிகரெட் விலை கணிசமாக உயா்வதால், சாதாரண மக்கள் இதனை வாங்குவது குறையும். இது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடக்கூடும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவும்" என்று ஒரு தரப்பினா் இதனை வரவேற்றனா்.
அதேநேரம், "விலை அதிகரிப்பதாலேயே ஒருவரது புகைப்பழக்கத்தை மாற்றிவிட முடியாது. மாறாக, இது சட்டவிரோத கடத்தல் மற்றும் தரமற்ற உள்ளூா் புகையிலை பொருள்களின் புழக்கத்தை அதிகரிக்கக்கூடும்" என மற்றொரு தரப்பினா் தெரிவித்துள்ளனர்
சிலர் இந்த விலை உயர்வை அரசாங்கத்தின் வரம்பு மீறிய செயல் என்றும், "பீடி குடிக்கும் நேரம் வந்துவிட்டது" மற்றும் "நாங்கள் தில்லியின் புகை காற்றிலேயே வாழ்ந்து கொள்கிறோம், இலவசம் இலவசம் இலவசம்" போன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.