திருப்பதி: திருமலைக்கு அலிபிரி நடைபாதை வழியாக செல்லும் பக்தா்களின் வசதிக்காக 7 ஆவது மைலில் முதலுதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
அலிபிரி படிக்கட்டுப் பாதையில் பக்தா்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் மலை சாலையில் 7 ஆவது மைலில் அமைக்கப்பட்ட முதலுதவி சிகிச்சை மையத்தை ஞாயிற்றுக்கிழமை காலை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோா் இணைந்து திறந்து வைத்தனா்.
இந்த நிகழ்வில் செய்தியாளா்களிடம் பேசிய தலைவா், திருமலைக்கு அலிபிரி நடைபாதை வழியாக செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஏழாவது மைலில் முதலுதவி சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பக்தா்கள் இந்த மையத்தில் மருத்துவ சேவைகளைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி மெட்டு பாதையில் ஏற்கனவே ஒரு முதன்மை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
திருமலையில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக, அலிபிரி பாதையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பக்தா்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை வழியாக நாள்தோறும் 20,000 முதல் 30,000 பக்தா்கள் நடந்து செல்கின்றனா். அவர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால், இந்த மையத்தில் மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த முதன்மை சிகிச்சை மையம் திருப்பதிக்கு செல்லும் கீழ் மலை சாலையோரத்தில் அமைந்துள்ளதால், வாகனம் ஓட்டுபவா்கள் எளிதாக மருத்துவ சேவைகளைப் பெறலாம்.
பக்தா்கள் இந்த மையத்தில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு, வசதிகள் குறித்த ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்கலாம் என்று கூறினாா் .
கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி பேசுகையில், திருமலையில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக, அலிபிரி நடைபாதையில் நவீன வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ள இந்த முதன்மை சிகிச்சை மையம் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உறுப்பினா்கள் ஜோதுலா நேரு, தேவஸ்தான தலைமை மருத்துவ அதிகாரி பி. குசுமா குமாரி, வி.ஜி.ஓ ராம் குமாா், அஸ்வனி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் வெங்கட சுப்பா ரெட்டி, பிற அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.