குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில், CREDAI FAIR-PRO 2025 தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 14) ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
கடந்த 2023-ஆம் ஆண்டு போலவே, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் முதலீட்டாளர்கள் பங்குதாரர்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் மிகப்பெரிய Property கண்காட்சியை இந்தச் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று முதலில் உணர்ந்து கொள்வது கட்டடங்கள்தான். அந்த வகையில், உங்களுடைய அமைப்பையும், நீங்கள் நடத்தி வரும் இந்தக் கண்காட்சியையும் வளர்ச்சியின் அடையாளமாகதான் நான் பார்க்கிறேன்.
சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமைத் திட்டங்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் நம்முடைய அரசுதான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது.
நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப் போகிறது.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் என்னவென்றால்…
சென்னையின் நெரிசலைக் குறைக்கவேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப்பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
நான் CREDAI Fairpro 2023-இல் கலந்து கொண்டபோது, ஒரு உறுதி அளித்தேன். அதை செயல்படுத்தும் வகையில் ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள கட்டட அனுமதி பெறும் முறை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மனை மற்றும் கட்டட ஒப்புதலுக்காக பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாகவும், வெளிப்படைத் தன்மையோடு குறைகளை தெரிந்துகொண்டு செயலாற்றும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ், மனைப்பிரிவு மற்றும் கட்டடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒப்புதல் வழங்குவதற்கான கால அளவு 180 நாள்களிலிருந்து 64 முதல் 90 நாள்களாக குறைந்திருக்கிறது.
நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் பொதுமக்களின் தேவையை உணர்ந்து செயல்படுகின்ற அரசு என்பதற்கு இதெல்லாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், நடுத்தர வர்க்க மக்கள் ஆகிய அனைவரின் சொந்த வீடு கட்டும் கனவையும் நனவாக்க 22.07.2024 அன்று உடனடி ஒப்புதல் பெறும் வகையில் சுயசான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
இந்த திட்டத்தின் வாயிலாக, 2500 சதுர அடி கொண்ட மனையிடத்தில் 3500 சதுர அடி கட்டடப் பரப்பு வரைக்கும், தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட குடியிருப்புக் கட்டடங்களுக்கு, எந்த அரசு அலுவலகங்களுக்கும் செல்லாமல் மக்கள் வீட்டிலிருந்தபடியே சுயசான்றிதழ் முறையில் அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட முடிவுறு சான்று பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை 51 ஆயிரம் கட்டட அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்திலேயே இந்தத் திட்டமானது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால், முன் அனுமதிக்கப்பட்ட 100 கட்டடத் திட்டங்களை பதிவேற்றி இந்த செயல்முறையை மேலும் செம்மைப்படுத்தி எளிமையாக்குவதற்கான முயற்சிகளை வீட்டுவசதித் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.
சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும், C.M.D.A மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம்.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
சென்னை பெருநகர மண்டல போக்குவரத்து தேவைகளை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கான இலக்கை அடைகின்ற வகையில் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.
இதையும் படிக்க: சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திரும்பப் பெற தயார்: மோடி
சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிகளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள். இதை மேம்படுத்த, தமிழ்நாடு அரசால் சென்னை நீர்முனைய வளர்ச்சி திட்ட நிறுவனம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம், முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளைத் தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த 250 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது.
இந்தத் திட்டம், பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தை தடுக்கும் அமைப்போடு உருவாக்கப்படும்.
ஸ்பாஞ்ச் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு மையங்கள் மற்றும் சந்தைகள், பேருந்து முனையங்கள், சுரங்கப்பாதைகளை நவீனபடுத்துதல், புதிய திட்ட சாலை இணைப்பு பகுதிகளை கண்டறிந்து மறுவடிவமைத்து மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு நகரம், தீவுத்திடலில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் மற்றும் போரூர் நகர்ப்புறப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பரந்து விரிந்த நன்செய் நிலப் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள். இதனை செயல்வடிவாக்க தற்பொழுது நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019-ஐ புதுப்பிக்கும் செயல்பாடுகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முழு ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறது.
இந்த மேம்பாட்டுப் பணிகளில் உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும், கோரிக்கைகளையும் பரந்த நோக்கத்தில் பரிசீலித்து இந்த துறையின் ஒருமித்த வளர்ச்சிக்கு நம்முடைய அரசு என்றைக்கும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்து பகுதியையும் வளர்ப்பதுதான் எங்களுடைய நோக்கம்! என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.