அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலையின்போது அவரை காப்பாற்ற முயன்ற ரகசிய உளவாளி தனது 93வது வயதில் மரணமடைந்துள்ளார்.
அமெரிக்காவின் 35வது அதிபரான ஜான் எஃப் கென்னடி கடந்த 1963ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி அன்று திறந்த வாகனத்தில் மக்களை நோக்கி கையசைத்தவாறு சென்றபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவத்தின் போது, அதிபரின் மனைவியான ஜாக்குலின் கென்னடியின் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்ட க்ளிண்ட் ஹில் எனும் ரகசிய உளவாளி அவர்களுக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
திடீரென மறைந்திருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டவுடன், ஹில் தனது வாகனத்தை விட்டு கீழே இறங்கி அதிபரின் வாகனத்தை நோக்கி ஓடி அதில் ஏறி குதித்து அதிபரையும் அவரது மனைவியையும் தனது உடலைக் கொண்டு மறைத்து காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், அந்த தாக்குதலில் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மீது குண்டுகள் பாய்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி!
இந்த முழு சம்பவத்தையும் சுற்றியிருந்த மக்கள் தங்களது கேமராக்களில் எடுத்த புகைப்படங்களில் ஹில் அதிபரின் காரில் பாய்ந்து குதித்தது பதிவாகியிருந்த நிலையில் அது வெளியிடப்பட்டபோது மிகவும் பிரபலமடைந்தது.
அவரது துணிச்சலான அந்த செயலுக்காக அவருக்கு விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன. பின்னர், அவர் அமெரிக்க ரகசிய உளப் பிரிவின் துணை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார்.
இருப்பினும், அதிபர் கென்னடியின் படுகொலையைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட மனவுளைச்சலினால் கடந்த 1975 ஆம் ஆண்டு தனது 43 அவது வயதில் அவரது பணிக்காலம் முடிவதற்கு முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் பிரபல நாவலாசிரியராக அறியப்பட்ட க்ளிண்ட் ஹில் தனது 93வது வயதில் கடந்த பிப்.21 அன்று கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது நினைவுக்குறிப்பு புத்தகத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு லிஸா மெக்குப்பின் எனும் பத்திரிக்கையாளருடன் இணைந்து பணியாற்றிய அவர், 2021 ஆம் ஆண்டு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதிபரின் படுகொலைக்கு பின்னரும் அவரது மனைவியின் பாதுகாவலராக செயல்பட்ட க்ளிண்ட் ஹில், தான் சற்று வேகமாக செயல்பட்டிருந்தால் அதிபரின் உயிரைக் காப்பாற்றியிருக்கக் கூடும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.