நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகைமூட்டம் ஏற்பட்டதால், வடமதுரை அருகே ரயில் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்கு பின்னர் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் நாள்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் புதன்கிழமை காலை (ஜூலை 9) திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வந்தபோது திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து புகை மற்றும் தீப்பிடித்த வாசனையை பயணிகள் உணர்ந்ததால் பயணிகள் மத்தியில் அச்சமும், பரபரப்பும் நிலவியது.
இதையடுத்து ஆபத்தை உணர்ந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆபத்தை உணர்ந்து ரயில் ஓட்டுநர் உடனே ரயிலின் வேகத்தை குறைத்து வடமதுரை அருகே பாதுகாப்பாக ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து ரயில் ஓட்டுநர், பாதுகாவலர்கள் புகை வந்து பெட்டியை சோதனை செய்தனர். அப்போது அந்த பெட்டியில் இருந்த குளிர்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தொழில்நுட்புனர்கள் குளிர்சாதனத்தை சரி செய்தனர்.
இதனால் 30 நிமிட தாமதங்களுக்கு பின்னர் ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது.
வந்தே பாரத் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய பிற ரயில்களும் பாதி வழியில் அங்காங்கே நிறுத்தப்பட்டது.
நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறி சம்பவத்தால் பயணிகளிடையே பதற்றமும், அச்சமும் நிலவியது.
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர், சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலின் சி1 பெட்டியில் புகை மற்றும் தீப்பற்றிய வாசனையை பயணிகள் உணர்ந்தனர். பின்னர் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.