மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது தொடர்பு கொள்வதற்காக டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமையில் (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி, அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியது. ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேலுக்கு அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உதவினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அந்நாடுகளின் ராணுவத் தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஈரானில் உள்ள எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பு அமைச்ச தலைமையகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, தங்கள் நாட்டு மக்களை, பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது தொடர்பு கொள்வதற்காக டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்க பதிவில்,
ஈரானில் நிலவும் அண்மையத் தகவல்களை தூதரகத்தில் இருந்து பெறுவதற்கு ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். https://t.me/indiansiniran இந்த டெலிகிராம் இணைப்பு தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்களுக்கானது மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், தயவுசெய்து https://forms.gle/cCLrLyzFkS2AZYEM8 2. பீதி அடையாமல் இருப்பது முக்கியம், தேவையற்ற பயணங்களை தவிரித்து உரிய எச்சரியுடன் செயல்படுவது மற்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அழைப்பிற்கான தொடர்பு எண்கள்: + 989128109115, +989128109109
வாட்ஸ்ஆப் தொடர்புக்கான எண்கள்: +9891776990364, ஜஹேடன்: +989396356649 எண்களை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இந்திய தூதரகத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள இந்தியர்கள், ஈரானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதையும், அவசர நடவடிக்கை தேவை என்பதையும் சுட்டிக்காட்டுவது முக்கியம்.
தற்போது ஈரானில் ஏராளமான இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களில் பலர் மிகவும் பீதியடைந்துள்ளனர், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். அவர்களின் குடும்பங்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
நிலைமை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டை மீறவில்லை என்றாலும், அதிகரித்து வரும் பதட்டங்கள் ஒவ்வொரு மணி நேரமும் நிலைமையை மோசமாக்குகின்றன. இந்திய அரசு மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கு ஏதேனும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.