கிருஷ்ணகிரி: மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ, கொள்கை பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை எம்பி ஆகியோர் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்கள் கே. அசோக் குமார் எம்எல்ஏ, பாலகிருஷ்ண ரெட்டி, டி.எம். தமிழ்செல்வம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.
மாம்பழத்திற்கு கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ. 13 வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும். மாங்கூழ் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மா விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க முன் வராத தமிழக அரசையும் கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர் மா விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றுள்ளனர்.
காலை 9 மணிக்கு தொடங்கி இந்த உண்ணாவிரதப் போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், விவசாயிகள்,பொதுமக்கள் என திரளாக பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.