சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார், பாஜக நடத்தி வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட விஜயகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இதையடுத்து கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஜயகுமார், நான் இருமொழி கொள்கை தான் என்று கூறினேன். பாஜகவினர் தான் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினர். நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளரைச் சந்தித்த பேச இருப்பதாக என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.