கன்னியாகுமரி இரணியல் அருகே ரயில் தண்டாவளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து மங்களூருவுக்கு வியாழக்கிழமை காலை பரசுராம் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் இரணியல் ரயில் நிலையம் அருகே வந்தபோது, மா்மநபா்களால் தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிச்சியடைந்த ரயில் என்ஜின் ஆபரேட்டா் உடனே ரயிலை நிறுத்தியுள்ளார்.
ரயில் பாதி வழியில் திடீரென நிறுத்தப்பட்டது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயிலில் இருந்து கீழே இறங்கிய ரயில் ஓட்டுநர், சம்பவம் குறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தண்டவாளத்தில் இருந்து கற்களை ரயில்வே கடவுப்பாதை பராமரிப்பாளர்கள் அகற்றிதை அடுத்து அரை மணி நேர காலதாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
தண்டவாளத்தில் கற்களை வைத்துச் சென்ற நபா் யாா் என்பது குறித்தும், ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
சரியான நேரத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை ரயில் ஓட்டுநர் கண்டறிந்து ரயிலை உடனடியாக நிறுத்தியதால், நடைபெறவிருந்த பெரும் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.