துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.
துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் தேசியக் கொடியுடன் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அண்டாலியா நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பிரபல போகிமோன் கார்டூனில் வரும் ’பிக்காச்சூ’ கதாபாத்திரத்தின் வேடமணிந்து ஒருவர் பங்குபெற்றுள்ளார். அந்தக் கதாபாத்திரத்தின் முழு உருவ ஆடையணிந்து அவர் கலந்துக் கொண்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
மேலும், அவருடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போராட்டக்காரர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் பங்குபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அங்கு விரைந்தவுடன் அங்கிருந்த தப்பித்து ஓடியவர்களுடன் பிக்காச்சூவும் ஓடும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஏராளமான பிக்காச்சூ ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல்லின் மேயரான எக்ரீம் இமாமோக்லு கடந்த மார்ச் 19 அன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வரும் 2028ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிபர் எர்டோகனை எதிர்த்து இமாமோக்லு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 260-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.