ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை(மே 18) காலை பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் ரிசார்ட் -1பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்டனா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. மேலும், பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது.
உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. ஆனாலும், இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள ரிசாட்-1பி ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வரும் 18 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.59 மணியவில் இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பல்துறை ஏவுதள வாகனமான பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவுக்கான பிரத்யேக பூமி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ராக்கெட்டில் 1710 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பரந்த நிலப்பரப்பில் உயர் தெளிவுத்திறன் கொண்ட நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெறமுடியும். அத்துடன் அனைத்து வானிலை தரவுகளை விண்வெளியில் இருந்து உடனுக்குன் அனுப்பும் திறன்கள் கொண்டது. இதில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
உயர்ந்த பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் இதன் பயன்பாடு முக்கியமானது, செயற்கைக்கோள் உணர்திறன் வாய்ந்த எல்லைகள் மற்றும் கடற்கரைகளின் கண்காணிப்பை மேம்படுத்தும் என்று என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.