புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது, ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
நாட்டில் ஒரே நாளில் புதிதாக 511 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் பல மாநிலங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,710 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,170 ஆக பதிவாகியுள்ளது.
தில்லி, குஜராத், கர்நாடகம், பஞ்சாப், தமிழ்நாட்டில் தலா ஒருவர், மகாராஷ்டிரத்தில் இரண்டு பேர் என 7 பேர் இறந்துள்ளனர். இந்த மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் புதிதாக 227 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,147 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் புதியதாக 27 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் நிலைமையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முந்தைய கரோனா தொற்று பரவலின் போது உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா பரவலை சமாளிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கட்டமைப்பு தேவையான அளவில் உள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.