திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(நவ.6) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஆட்சியர் உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் பள்ளி நேரத்தை அறிவித்து வகுப்பிற்கு அவசியம் வர வேண்டும் என மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குழுவில் தெரிவித்துள்ளது பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (நவ.6) முதல் நவ.11 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை(நவ.6) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள்
ஆனால், ஆட்சியர் உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் பள்ளி நேரத்தை அறிவித்து பள்ளிக்கு அவசியம் வர வேண்டும் என மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குழுவில் தெரிவித்துள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் நடவடிக்கை வேண்டும்
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டாலும் அந்த உத்தரவை தனியார் பள்ளிகள் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக திருப்பத்தூர் பகுதியில் சில தனியார் பள்ளிகள் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவுக்கு மதிப்பளிப்பதே இல்லை. கனமழையிலும் பள்ளிகளுக்கு குழந்தைகளை வரவழைத்து பள்ளிகளை இயங்கி வருகின்றனர். இதனால் மாணவர்களின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகளின் மீது விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.