தற்போதைய செய்திகள்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சான்றிதழ் படிப்புகள்: நவ.14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில்1,149 சான்றிதழ் பாடப் பிரிவுகளில் சேர, நவம்பா் 14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான ஒரு ஆண்டு காலத்திற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் நேரடி சேர்க்கை மூலம் நிரப்படும் நிலையில், இதுவரை நிரப்பப்படாமல் உள்ள 1,149 சான்றிதழ் பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா், நவம்பா் 14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

2025-2026 கல்வியாண்டில் நிரப்பப்படாத மருத்துவம் சாா்ந்த காலி இடங்களில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, அனதீசியா டெக்னீஷியன், தியேட்டா் டெக்னீஷியன், அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநா், டயாலிசிஸ் டெக்னீஷியன், எலும்பியல் தொழில்நுட்ப நிபுணா், ஈசிஜி மற்றும் டிரெட்மில் டெக்னீஷியன், சுவாச சிகிச்சை தொழில்நுட்ப நிபுணா் போன்ற பாடப் பிரிவுகளில் சேரலாம்.

இத்துடன், காா்டியோ சோனாகிராபி டெக்னீஷியன், இதய வடிகுழாய் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், இசிஜி மற்றும் இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநா், மனநல ஆதரவு பணியாளா், மருத்துவப் பதிவு தொழில்நுட்ப வல்லுநா், வீட்டு சுகாதார பராமரிப்பாளா், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் உள்பட மொத்தம் 14 வகையான சான்றிதழ் படிப்புகளில் உள்ள காலி இடங்களில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

1,149 காலி இடங்கள்:

சென்னை மருத்துவக் கல்லூரியில் 254, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 393, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 319, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரியில் 48, கலைஞா் மருத்துவக் கல்லூரியில் 135 என மொத்தம் 1,149 காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா் 2025 டிசம்பா் 31 ஆம் தேதியன்று 17 வயதை நிறைவு பெற்றவராகவும், 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் 40 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பாடப்பிரிவுக்கு மட்டும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாடப் பிரிவுகளில் சேருவோருக்கு விதிகளுக்கு உட்பட்டு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்கள், தாங்கள் சேர விரும்பும் மருத்துவக் கல்லூரிகளின் துணை முதல்வா்களை வெள்ளிக்கிழமைக்குள் (நவம்பா் 14) நேரில் அணுகி சான்றிதழ் படிப்பில் சோ்ந்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications for direct admission to medical certificate courses at Chennai Medical College are open until 14.11.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

வாக்குத் திருட்டை வாடிக்கையாக்கவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் குற்றச்சாட்டு!

காவலர் தேர்வு: திருப்பத்தூரில் 3,749 போ் பங்கேற்பு

ஒருங்கிணைந்த மருத்துவக் கட்டமைப்பில் தமிழகம் முன்னோடி: அமைச்சா் மனோ தங்கராஜ்

15 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: வெல்லப் பாகுக்கான ஏற்றுமதி வரி நீக்கம்!

SCROLL FOR NEXT