ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ராமேஷ்வர் லால் துடி வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் காலமானார்.
2023 ஆகஸ்ட் மாதம் மூளை ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலைக்குச் சென்ற ராமேஷ்வர் துடி, ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீரான நிலையில் சமீபத்தில் பிகானேரி திரும்பினார்.
இந்நிலையில், ராமேஷ்வர் லால் துடி வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் காலமானார். இதனை ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இறங்கல் செய்தியில்,
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், பிகானேரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ ராமேஷ்வர் துடியின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து சீராகி வந்த நிலையில், இவ்வளவு இளம் வயதில் அவர் மறைந்தது எனக்கு தனிப்பட்ட இழப்பு என்று கூறியுள்ளார்.
ராமேஷ்வர் துடி தான் ஏற்றுக்கொண்ட எந்தவொரு பணிகளையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்து நிறைவேற்றியவர். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என என்னுடன் இருந்தவர். அவர் எப்போதும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என்று அவர் மேலும் கூறினார்.
சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்த ராமேஷ்வர் துடி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது எங்கள் அனைவரையும் மிகவும் வேதனைப்படுத்தியது. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு பலத்தை அளிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.