சென்னை: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், உரிமத்தை ரத்து செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதே மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், ஒன்று முதல் ஏழு வயது வரை உள்ள ஆறு குழந்தைகள், 15 நாள்களுக்கள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணம் என்பது தெரியவந்தது.
இதற்கான காரணம் குறித்த விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’மருந்து ஆகிய இருவேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இருமலுக்காக, அந்த மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. அந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைசால்’எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் தெரிய வந்தது. ‘பெயிண்ட், மை’போன்ற பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து, பல்துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன. இதனிடையே, மத்தியப்பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மௌரியா, காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) ‘கோல்ட்ரிஃப்’மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகவும், அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு அக்.1 ஆம் தேதி கடிதம் எழுந்திருந்தது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினா், விடுமுறை நாள்களாக இருந்தாலும், மக்களின் நலன்காக்கும் பிரச்னை என்பதால், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கிருந்த 13 பேட்சில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்தனர்.
இதில், மற்ற மருந்துகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இல்லை. அதேநேரம், ‘கோல்ட்ரிப்’ மருந்தில், ‘டை எத்திலீன் கிளைசால்’ என்ற ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் மத்திய அரசின் மருத்துவ ஆய்வுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், மறு உத்தரவு வரும் வரை உற்பத்தி மற்றும் அம்மருந்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடா்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்துக்குப்பின், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
மேலும், மற்றொரு மருந்தான ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்துள்ளாா்.
குழந்தைகள் இறப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டு, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.