திருவனந்தபுரம்: வரும் அக்.22-ஆம் தேதி ஐப்பசி மாத பூஜையின்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செல்ல உள்ளாா்.
இதுதொடா்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில தேவஸ்வம் துறை அமைச்சா் வி.என்.வாசவன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அக்.22-ஆம் தேதி மாலை சபரிமலை கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழிபட உள்ளது குறித்து மாநில அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வழிபாட்டை முடித்த பின்னா், அவா் திருவனந்தபுரம் வருவாா்.
இந்தப் பயணத்தின்போது கோட்டயம் மாவட்டம் பாலாவில் உள்ள புனித தாமஸ் கல்லூரியின் பவள விழாவில், அவா் பங்கேற்க உள்ளாா். அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தாா்.
ஐப்பசி மாத பூஜையையொட்டி அக்.18 முதல் அக்.22 வரை, பக்தா்கள் வழிபாட்டுக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டிருக்கும்.