மத்தியப் பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழகத்தின் கலப்பட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன.
அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. சா்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் (பேட்ஜ் 13) உள்பட 5 மருந்துகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினா்.
அதில், டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சு ரசாயனம், கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதம் இருப்பது கடந்த 2-ஆம் தேதி கண்டறியப்பட்டதை அடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோல்ட்ரிஃப் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ஒடிஸா, புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடா்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டன.
அந்த மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த நிறுவனம் அதிகாரிகளால் கடந்த 3-ம் தேதி மூடப்பட்டது. ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக் கூடாது என விளக்கம் கேட்டு குறிப்பாணையும் அனுப்பப்பட்டது.
இதனிடையே, சா்ச்சைக்குரிய கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மருத்துவர் மற்றும் ஸ்ரீசென் பாா்மா உற்பத்தி நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மருத்துவர் பிரவீன் சோனி மூன்று நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். மருந்து உற்பத்தி நிறுவனமான ஸ்ரீசன் மருந்து நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சா்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்ட பின்னா், இதுவரை 20 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். ரங்கநாதனை(75 ) மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்த 7 பேர் கொண்ட காவலர்கள் குழுவினர் கைது செய்தனர்.
அசோக் நகர் போலீசாரின் உதவியுடன் மத்தியப் பிரதேச காவல்கள் குழு கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரத்திற்கு அழைத்துச் சென்று மத்தியப் பிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், ரங்கநாதன் இன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போக்குவரத்து காவலில் வைக்கப்பட்ட பிறகு சிந்த்வாராவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் இறந்துவிட்டதாகவும்; ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்தியப் பிரதேச துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான ராஜேந்திர சுக்லா புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த 20 குழந்தைகளில் 17 பேர் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பந்தூர்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனையைத் தடை செய்வதோடு, கடைகளில் தற்போதுள்ள இருப்புகளையும் பறிமுதல் செய்யவும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார்.
இதனிடையே, தமிழக அரசின் அலட்சியத்தால் குழந்தைகளின் மரணம் ஏற்பட்டது என்று மத்தியப் பிரதேச மாநில பொது சுகாதாரத் துறை இணையமைச்சா் நரேந்திர சிவாஜி படேல் குற்றஞ்சாட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.