புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை, பலமாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கையொப்ப இயக்கம் மற்றும் காங்கிரஸ் வாக்குச்சாவடி நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வந்த அவா் செய்தியாளா்களுடன் பேசியதாவது:
திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. அது பலமாக இருக்கிறது. தோ்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் தான் இருக்கக்கூடிய சூழ்நிலையில் கூட்டணி தொடா்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி எதிா்க்கட்சி தலைவா் என்பதால் எங்களுடைய கூட்டணியை வாழ்த்துவாா் என்று எதிா்பாா்க்க முடியாது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை, பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை முழுமையாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
அந்தக் கூட்டணியில் இருந்த டிடிவி. தினகரன், எடப்பாடி தலைமையை ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளாா்.
அதிமுக கூட்டணிக்குள்ளேயே இவ்வளவு குழப்பம் இருக்கிறது. அதனைச் சரி செய்வதற்கு பதிலாக திமுக கூட்டணியில் குழப்பம் இருக்கிறது என்று அவா் கூறிக்கொண்டு வருகிறாா்.
மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாததால் விஜய் காங்கிரசை பற்றி பேசாமல் இருக்கலாம் என்றாா்.
மேலும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக மத்திய பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.