அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து தப்பிக்க, மலேசியா பயணத்தை மோடி தவிர்த்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
மலேசியாவில் வருகின்ற அக். 26 முதல் 28 வரை மூன்று நாள்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், பிரதமர் மோடியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீபாவளிப் பண்டிகை காரணமாக பிரதமர் மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் காணொலி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார் என்று மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதனை விமர்சித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பிரதமர் மோடி கோலாம்பூரில் நடக்கும் உச்சி மாநாட்டுக்குச் செல்வாரா? இல்லையா? என்ற ஊகங்கள் பல நாள்களாகவே வெளியாகி வந்தன. தற்போது அவர் செல்லமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.
இதனால் உலகத் தலைவர்களை கட்டியணைத்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பையும், தன்னை விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் வாய்ப்பையும் அவர் இழக்க நேரிடும்.
பிரதமர் கோலாம்பூர் செல்லாததற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை. அங்கு வருகைதரும் அதிபர் டிரம்ப்பிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. சில வாரங்களுக்கு முன்னதாக, எகிப்தில் நடந்த காஸா அமைதி மாநாட்டுக்கான அழைப்பை அவர் மறுத்ததற்கான காரணமும் இதுதான்.
சமூக வலைதளங்களில் அதிபர் டிரம்ப்பை புகழ்ந்து மோடி பதிவிடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆபரேஷன் சிந்தூரை தடுத்ததாக 53 முறையும், ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தப் போவதாக மோடி உறுதி அளித்திருப்பதாக 5 முறை கூறியவருடன் நேரில் நெருக்கமாக சந்திப்பது வேறு விஷயம். இது மோடிக்கு மிகவும் ஆபத்தானது.
பிரதமர் மோடி, பச்சகே ரே ரெஹ்னா ரே பாபா, பச்சகே ரெஹ்னா ரே" (கவனமாக இரு...) என்ற பாலிவுட் பாடலை நினைவு கூர்ந்திருக்கலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.