வாஷிங்டன்: காஸாவில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து சுமாா் 251 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, அதற்கான எதிர்வினையாக இஸ்ரேல் படைகள், காஸாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய தாக்குதல்களுக்கு சுமார் 20,179-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 68,527-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்; 170,395-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா். இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காஸா உருக்குலைந்தது.
இந்த நிலையில், காஸாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின், காஸா போர் நிறுத்தத்துக்கான டொனால்ட் டிரம்பின் 20 நிபந்தனைகளை உள்ளடக்கிய விரிவானதொரு திட்டத்தை இஸ்ரேல் செப். 29 இல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததுடன், பாலஸ்தீன சிறைக் கைதிகளுடன் ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை அக்டோபர் 10 ஆம் தேதி ஒப்புதல் அளித்த சில மணி நேரத்தில் போா் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் இன்னும் 13 இஸ்ரேலிய பிணையக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்காமல் ஹமாஸ் பல வழிகளில் போர் நிறுத்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளின் சடலங்களையும் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் இறந்த உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கூடுதல் நேரம் தேவைப்படுவதாக ஹமாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் தங்களால் முடிந்தவரை அனைத்து உடல்களையும் ஒப்படைத்துவிட்டதாக கூறியது.
இதையடுத்து ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார்.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் ஒரு வார்த்தை சொன்னால் இஸ்ரேலின் படைகள், காஸாவின் தெருக்களுக்கு மீண்டும் திரும்பும். இஸ்ரேல் படையினரால் காஸாவுக்குள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியும். என்னால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஹமாஸ் ஆயுதங்களை கீழே வைக்கவில்லை என்றால் நாங்கள் இறக்க வைப்போம். அது மிக மோசமானதாகவும் விரைவாகவும் நடக்கும் என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், போர் நிறுத்தங்களை மீறியதாகக் கூறி, காஸா மீது சக்திவாய்ந்த தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து காஸாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளின் மஞ்சள் கோடு என்று அழைக்கப்படும் பகுதியின் கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என புதன்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிரம்ப் ஆதரவு
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை கொன்றதை அடுத்து இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கியுள்ளனர். அவர்கள் பதிலடி கொடுக்கத்தான் செய்வார்கள். ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த டிரம்ப், இந்த தாக்குதல்களால் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று டிரம்ப் கூறினார்.
இதனிடையே, ஹமாஸ் இன்னும் 13 இஸ்ரேலிய பிணையக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்காத நிலையில், காஸாவில் இஸ்ரேலிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் அந்த உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.