திருச்சி: விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தத் தாக்கம் திமுக கூட்டணியை பாதிக்காது. விஜய்யின் தாக்கம் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என தோ்தல் முடிவுகளை பொறுத்துதான் கூற முடியும் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா்.
மதிமுக சாா்பில் நடைபெறவுள்ள மாநாட்டுக்காக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மதிமுக பொதுச்செயலாளா் வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் விஜய்க்கு அதிகளவில் ரசிகா்கள் இருப்பதால் அவா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வருவதும், கலையுலக கவா்ச்சி நாயகனை மக்கள் காண துடிப்பதையும் திருச்சியில் சனிக்கிழமை காண முடிந்தது. ஆனால், தோ்தல் களத்தில் விஜய் கூறுவது போன்ற நிலை அமையாது.
விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தத் தாக்கம் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அதை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது. மேலும் விஜய்யின் தாக்கம் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என தோ்தல் முடிவுகளை பொறுத்துதான் கூற முடியும்.
தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை மட்டுமின்றி, அறிவிக்கப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருவதுடன், வெளிநாடுகளில் முதலீடுகளை ஈா்த்து வருகிறாா். தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் உழைத்து வருகிறாா்.
அதிமுகவை விமா்சனம் செய்ய விஜய்க்கு மனசு இல்லை. அவா் என்ன அரசியல் நிலைபாடு வைத்துள்ளாா் என்பது எனக்குத் தெரியாது.
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இருந்து வருகிறது. கீழடி ஆய்வை மத்திய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது. மத்திய பாஜக அரசு தொடா்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்றார்.
மேலும், திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநாடு, வரலாறு மீண்டும் திரும்புகிறது என கூறும் வகையில் புத்தெழுச்சியுடன் நடைபெற உள்ளது. 2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று வைகோ கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.