கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னையில் தியாகராய நகர் ஹோட்டல் ரெசிடென்சியில் வியாழக்கிழமை (செப்.18) நீலப் பொருளாதார மாநாடு-2025 பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நீலப் பொருளாதார மாநாடு என்று சொல்வதைவிட, இதனை நீலப் பொருளாதார கருத்தரங்கம் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும் என்று தெரிவித்து, உரையை தொடங்கிய அமைச்சர், முதல்லவர் மு.க.ஸ்டாலின் 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நீலப் பொருளாதாரத்தின் பங்கினை மேம்படுத்த இந்த மாநாட்டில் பங்குப்பெறும் அனைத்து வல்லுநர்களும் அனுபவமிக்க கருத்துகளை இந்த மாநாடு மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் கடற்கரை பிற மாநில கடற்கரைகள் போல் அல்லாமல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளைக் கொண்ட ஒரு தீபகற்ப கடற்கரை பகுதியாகும். பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத்திற்கு மிக அருகாமையில் கடற்கரை கொண்ட பகுதியாகும். மேலும், தெற்கே நெருங்கிய உறவுகள் கொண்ட அண்டை நாடாக இலங்கை உள்ளது. 14 கடலோர மாவட்டங்கள் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு தரப்பினர்.
குறிப்பாக தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடற்கரை பகுதியிலேயே குடியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள், மீன்பிடி துறைமுகங்கள், மீன்வளர்ப்புப் பண்ணைகள், வணிக ரீதியாக ஒன்றிய மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகங்கள், மக்கள் பொழுதுபோக்கு கடற்கரை பகுதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளான அலையாத்தி காடுகள், ஆமைகள் முட்டையிடும் பகுதிகள், மன்னார் வளைகுடா பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகள், பறவைகள் சரணாலயங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் (திருச்செந்துார், இராமேஸ்வரம்), தேவாலயங்கள் (வேளாங்கண்ணி, மணப்பாடு), இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் (நாகூர்), கடலோர தொழில் பூங்காக்கள், கலங்கரை விளக்கங்கள் என்று எடுத்துரைத்தார். தமிழ்நாடு மிகப்பழமையான கடல்சார் வரலாற்றை கொண்டது. பண்டைய தமிழ் மன்னர்கள் கடல்கடந்து வாணிபம் செய்ததோடு, சக்திவாய்ந்த கப்பல்படைகொண்டு, தெற்காசிய நாடுகள் சுமத்ரா, ஜாவா வரை கைப்பற்றி தங்கள் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டியுள்ளனர்.
கப்பல் கட்டுதலில் மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் இருந்தததற்கான சான்றுகள் உள்ளன. பண்டைய தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து தென்கிழக்கு ஆசியா, இலங்கை, ரோம், கிரேக்க நாடுகளுடன் வாணிபம் நடைபெற்று வந்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர், உலகளவில், சுமார் 80% சதவீத வணிகமும், மிகநீண்ட சுமார் 11000 கிலோ மீட்டர் நீள கடற்கரைப் பகுதியைக் கொண்ட நம் நாட்டில் சுமார் 95% சதவீத வணிகம் கடல்வழியாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு இந்த நீலப் பொருளாதாரம் அதாவது கடல்வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது நம் தலையாயக் கடமை. அதற்கு வணிகத்துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், கடல்சார் சுற்றுலா மேம்பாடு, கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல், ஆகிய துறைகளில் நாம் மேலும் முன்னேற்றமடைய திட்டங்களை வகுக்கவேண்டும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு நாளும், திராவிட மாடல் அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வடிவமைத்து கொண்டிருக்கிறார்.
2024-25ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி சுமார் 6-7 சதவீதம் இருக்கும்போது, தமிழ்நாட்டின் ஜிடிபி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இரட்டை இலக்கத்தில் அதாவது 11.2% சதவீதம் வளர்ச்சியினை எட்டியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகள், மனிதவள திறன் மேம்பாடு, அதிக வாகன உற்பத்தி நிறுவனங்கள் (இந்தியாவின் டெட்ராய்ட்- மோட்டார் நகரம்), ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எளிதில் தொழில் துவங்க உகந்த மாநிலமாக உள்ளது ஆகியவனவாகும் என்று தெரிவித்தார்.
கடல்மார்க்கமாக கப்பல்கள் மூலம் கொண்டு செல்லும் சரக்கு வணிகத்தில், சாலை மற்றும் இரயில் மூலமாக கொண்டு செல்லும் கட்டணத்தைவிட மிகக் குறைவானதாகும்.
மேலும், சுற்றுப்புறச் சூழல் மாசின்றி சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இயலும். மேலும், சென்னை – கன்னியாகுமரி சாலையும், கிழக்கு கடற்கரை சாலையும் நம் கடலோர வணிக துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களுக்கு எளிதான சாலை இணைப்பினை வழங்குகிறது. மேலும் தமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளுக்கு இரயில் இணைப்பும் போதிய அளவில் உள்ளது.
இந்த துறைமுக மேம்பாட்டாளர்கள் கருத்தில் கொண்டு துறைமுகங்களை அமைக்கவும், தொழில் துவங்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இத்தகையப் பெருமை வாய்ந்த தமிழ்நாட்டில், நீலப் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்க இத்துறை சார்ந்த வல்லுநர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கருத்து பரிமாற்றம் ஆக்கப்பூர்வமாக அமைய வாழ்த்துகளை தெரிவித்தார்.
துறைமுக மேம்பாட்டாளர்கள், கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்புத் தொழில் வல்லுநர்கள், மீன்வளம் மற்றும் சுற்றுலாத்துறைகளின் நிபுணர்களின் அனுபவமிக்க கருத்துகளை தெரிவிக்க வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும், புகழ்பெற்ற பேச்சாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நீலப் பொருளாதார மாநாட்டில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு.சுனில் பாலிவால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர், துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ந.வெங்கடேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் தேவராஜன் மற்றும் துறைமுக மேம்பாட்டாளர்கள், துறைமுக நிர்வாகிகள், துறைமுக பயனீட்டாளர்கள், கடல்சார் சுற்றுலா சார்ந்த செயல்பாட்டாளர்கள், மீன்வள மற்றும் மீன்வளர்ப்புத் துறை சார்ந்த வல்லுனர்கள், கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் துறை வல்லுநர்கள், பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.