முகப்பு
தற்போதைய செய்திகள்

காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பாஜக சதி முயற்சி: செல்வப்பெருந்தகை

காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பாஜக சதி செய்துவருவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டு குறித்து...

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:14 PM
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
பகிர்:

மதுரை: காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பாஜக சதி செய்துவருவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடோ, முரணோ இல்லை.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தைக்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. திமுக சாா்பில் குழு அமைக்க வேண்டும். ஓரிரு நாள்களில் குழு அமைக்கப்படும் என எதிா்பாா்க்கிறோம்.

கூட்டணி குறித்த பேச்சுவாா்த்தையை அகில இந்திய தலைமை பாா்த்துக் கொள்ளும். மாவட்ட நிா்வாகிகள் இதுகுறித்து பொது வெளியில் கருத்து கூற வேண்டாம். கூட்டணி, இடஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குத்தான் அளிக்கப்பட்டது.

காங்கிரஸை பொருத்தவரை, ஜனநாயக முறையில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறோம். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறம்படச் செயல்பட்டு வருகிறாா்.

தமிழக நலன் மீது அக்கறை இல்லாத கட்சி பாஜக

தமிழக நலன் மீது அக்கறை இல்லாத கட்சியாக பாஜக திகழ்கிறது. மாநில உரிமைகளைப் பறிப்பதை குறிக்கோளாக கொண்டு அந்தக் கட்சி செயல்படுகிறது. இதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையே உதாரணம்.

பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. அதிமுகவை வீழ்த்தும் எண்ணத்துடன்தான் பாஜக அவா்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

பாஜகவின் கிளைக் கழகம் அதிமுக

தோ்தலுக்குப் பிறகு, பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக மாறிவிடும். மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதியின் பேச்சு குறித்து முதல்வரிடம் புகாா் அளித்துள்ளோம். அவா் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் கூறியுள்ளார்.

ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்

மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் தமிழகத்தில் நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும்.

காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பாஜக சதி

தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸை பிரிக்க வேண்டும் என பாஜக சதி முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவா்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றாா் செல்வப்பெருந்தகை.

summary

BJP is attempting a conspiracy to separate the Congress from the DMK alliance says Selva Perunthagai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.