முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு; பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களின் நிலை?: கனிமொழி கேள்வி

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அவர்களின் நிலை குறித்து....

Updated On : 11 பிப்ரவரி 2026, 9:29 am IST
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி.
பகிர்:

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அவர்களின் நிலை குறித்து கனிமொழி கேள்வி எழுப்பினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மதுரை மற்றும் சுற்றியுள்ள தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டறிய மதுரைக்கு வருகை தந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பகுதிவாரியான தேவைகள் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கப்படும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் மக்களின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும், திமுக வழங்கும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாத பல திட்டங்களையும் மாநில அரசு மக்களுக்காக செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

பகுதிவாரியான தேவைகள் குறித்து பேசும்போது, ராமநாதபுரம் பகுதியில் மீனவர்களின் கோரிக்கைகளும், தஞ்சாவூர் பகுதியில் விவசாயிகளின் தேவைகளும் அதிகமாக உள்ளன என்றும், மதுரையில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவை குறித்து தேர்தல் அறிக்கையில் விரிவான அறிவிப்புகள் வெளியாகும் என கூறினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாகியதற்குத் தமிழக அரசே காரணம் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த கனிமொழி, மத்திய அரசு நிதி ஒதுக்காததே முக்கிய காரணம் எனவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையினர் மக்களுக்காக ஐந்தாண்டுகளாக திமுக அரசு செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என அண்ணாமலை கேட்டுள்ளதற்கு, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் சிறுபான்மையினரின் நிலை குறித்து கனிமொழி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, மதுக்கடைகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடந்த தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்றும், தற்போது மதுக்கடைகளை மூட வேண்டும் என மக்கள் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் கூறினார். மேலும், மதுக்கடைகள் தொடர்பான எதிர்கால கொள்கை முடிவுகள் வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் விரிவாக அறிவிக்கப்படும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

summary

Tamil Nadu is a state where minorities live safely; their status in BJP-ruled states?: Kanimozhi questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.