மாணிக்கம் தாகூா் எம்.பி. 
தற்போதைய செய்திகள்

தலைமையின் வார்த்தைக்காக பொறுமையுடன் கடந்து போகிறேன்: வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தலைமை சொன்ன ஒரு வார்த்தைக்காக மரியாதை கொடுத்து பொறுமையுடன் கடந்து போகிறேன் என்று மாணிக்கம் தாகூர் பதிலடி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் உள்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என மதுரையில் கூறியதற்கு, தலைமை சொன்ன ஒரு வார்த்தைக்காக மரியாதை கொடுத்து பொறுமையுடன் கடந்து போகிறேன் என்று மாணிக்கம்தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என கட்சி தலைவர்களின் கருத்துகள் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த நிா்வாகிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனா்.

குறிப்பாக மாணிக்கம் தாகூா் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவா் பிரவீண் சக்கரவா்த்தி ஆகியோா் நேரடியாகவே இது குறித்து திமுகவிடம் கேள்வியெழுப்பி வருகின்றனா்.

ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது

தமிழகத்தில் நிகழாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் குழு அமைத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் தனது ‘எக்ஸ்’பக்கத்தில், கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் தோ்தலில் வெற்றி பெற முடியாது. ஆகையால், ஆட்சியில் பங்கு குறித்து விவாதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. தோ்தலில் தொகுதிகளைப் பங்கீடு செய்வதுபோல் ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளிக்கையில், மாணிக்கம் தாகூா் இந்த விவகாரத்தை தனது கட்சித் தலைமையிடம் கூறியிருக்க வேண்டும். கட்சித் தலைமை எங்களிடம் பேசும். பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் அமைத்த குழுவில் மாணிக்கம் தாகூா் இடம்பெறவில்லை என்றாா்.

ஆட்சியில் பங்கு கிடையாது

இந்நிலையில், மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் ராஜ கண்ணப்பன், கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால் முதல்வா் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு கிடையாது என தெளிவாகக் கூறிவிட்டாா் என தெரிவித்திருந்தாா்.

திமுகவுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன

இதனிடையே, திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் அமைச்சா் இ.பெரியசாமி, திமுகவுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாக்கூா் போன்ற தனிப்பட்ட நபா்களின் கருத்துகளுக்கு பதில் சொல்வது நியாயமில்லை. கருத்து வேறுபாடு என்பது கட்சிக்குள்பட்டே இருக்க வேண்டும். மாணிக்கம் தாக்கூா் நாள்தோறும் அறிக்கை வெளியிடுவதில் எங்களுக்கு(திமுகவினருக்கு) உடன்பாடில்லை. காங்கிரஸ் இயக்கத்தின் தலைவா்கள் கருத்து தெரிவித்தால், வேண்டுமெனில் பதில் சொல்லலாம்.

ராமதாஸ், திருமாவளவன் இணைந்து பேசினால் பிரச்னை முடிவுக்கு வரும் என காங்கிரஸ் கட்சித் தலைவா் செல்வப் பெருந்தகை கூறியிருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என பல்வேறு கட்சிகள் திமுக அணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு யாா் வந்தாலும் மறுக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தாா்.

அதற்கு எதிா்வினையாற்றும் வகையில் மாணிக்கம் தாகூா், ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், 2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 173-இல் போட்டியிட்டு 133-இல் வெற்றி பெற்றது. திமுக தோல்வி அடைந்த இடங்களைத் தான் நாங்கள் கேட்கிறோம். அதிகாரப் பகிா்வு அவசியம். ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை. இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமைக்கு தெரியும்

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய எம்.பி. மாணிக்கம்தாகூர், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகையும், நானும் அண்ணன், தம்பி போன்றவர்கள். எங்களுக்குள் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. இதைப் பெரிதாக்க வேண்டாம்.

காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் நன்மைக்காகப் போராடுகிறது. எங்களைப் பொருத்தவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் திமுக ஆட்சியமைக்க முடியாது என தவெக இணை பொதுச் செயலர் நிர்மல்குமார் கூறியது அவருடைய சொந்தக் கருத்து. ராகுல் காந்தி, கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியை பலமான கட்சியாக உருவாக்க நானும் முயற்சி செய்கிறேன். ஆட்சியில் பங்கு குறித்து ராகுல் காந்தியின் கருத்து என்ன என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். இதுகுறித்து கடந்த ஜன. 17-ஆம் தேதி தலைமையிடம் பேசினேன் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது

இந்த நிலையில், சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுடன் மாணிக்கம் தாகூா் பேசுகையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சிக்குரியது. திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு நீண்ட காலமானது. எனவே, தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் என்ற ஊகம் முற்றிலும் தவறானது. திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

அதிமுக- பாஜக கூட்டணி ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி மூன்றாவது இடத்தையே பெறும்.

தோல்வி பயம் காரணமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலா் தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்க்கலாம். நயினாா் நாகேந்திரன் தனது தொகுதியை மாற்றுவாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது எதிா்ப்புக் குரல் எழுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய ஆலமரம்; அதிலிருந்து அவ்வப்போது சிறிது சப்தம் வருவது இயல்பானதே என்றாா் அவா்.

உள்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருக்கும்

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய வைகோ, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாக பேசுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. நாங்களும் திருப்பி அடிப்போம் என்று பேசுவது, இரண்டு பேர் சண்டைபோட்டுக் கொண்டால் எப்படி பேதுவார்களோ அதுபோன்று பேசுகிறார். அவரது பேச்சை அவரது கட்சியினரே கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினருக்கு கலகக்குரல் எழுப்புவது வழக்கும். உள்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருக்கும் என்றும், இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருள்படுத்தவில்லை. அவர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்று வைகோ கருத்து தெரிவித்திருந்தார்.

வைகோவுக்கு கண்டனம்

இந்த நிலையில், வைகோவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’பக்கத்தில் தனது பதிலடியை பதிவிட்டுள்ளார்.

"கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போகிறேன். பயந்துகொண்டு இல்லை அண்ணன் வைகோ அவர்களே" என்று வைகோவுக்கு பதில் அளித்துள்ளார்.

இவர்களது கருத்து மோதல்கள் தமிழக அரசியலிலும், திமுக கூட்டணியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

I will patiently pass by for the word of the leadership: Manickam Thakur's response to Vaiko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை 6, நாளை மறுநாள் 3 மாவட்டங்களில் கனமழை!

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

”இந்த தேர்தல் இந்திய வரலாற்றிலேயே...” செங்கோட்டையன் பேட்டி

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

பாமக சின்னம்: ராமதாஸ் வழக்கு தள்ளுபடி; நீதிமன்றம் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT