வேலூர்: வேலூரில் கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சக மாணவர்களை பிடிப்பதற்காக போலீஸார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பத்தியவரத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் டேனி வல்லன் அரசு (19). இவர் வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரியில் பி.ஏ.போர்த்திறனியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் 3-ஆவது மாடியில் வாடகைக்கு தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருடன் ஆரணி, இந்திரா நகர், தொந்திகரம் பட்டுவை சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), புதுச்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி ( 19). தருமபுரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகியோரும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த டிச.25-ஆம் தேதி தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து டேனி வல்லன் அரசுவும், கிஷோர் கண்ணனும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே, புத்தாண்டு அன்று வேலூருக்கு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நண்பர்கள் தங்கியிருந்த அறையில் டேனி வல்லன் அரசு கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் டேனி வல்லன் அரசு உடலை பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வைத்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள சித்தப்பாறை கிராம மலையடிவாரத்தில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே டேனி வல்லன் அரசுவை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் மகனை கண்டுபிடித்து தருமாறு பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து டேனி வல்லன் அரசுவை தேடி வந்தனர்.
பின்னர் அவரது நண்பர் கிஷோர் கண்ணனை பிடித்து நடத்திய விசாரணையில் பார்த்தசாரதிதான் டேனி வல்லன் அரசுவை கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பார்த்தசாரதி புதுச்சேரியில் பதுங்கி உள்ளதாக தெரியவந்தது.
இதையடுத்து பார்த்தசாரதியை பிடிப்பதற்காக காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீஸார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,
பார்த்தசாரதிதான் டேனி வல்லன் அரசுவை கொலை செய்ததாக கிஷோர் கண்ணன் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்து வருகிறார். பார்த்தசாரதியை பிடித்தபிறகு தான் டேனி வல்லன் அரசு கொலையில் உண்மை விவரங்கள் தெரியவரும்.
டேனி வல்லன் அரசுவை இரும்புராடால் சர மாரியாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.